கர்நாடக மாநிலத்தில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் உத்தர கன்னட மாவட்டம் அங்கோலா தாலுகாவிற்கு உட்பட்ட சிரூர் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) காலை 09:00 மணியளவில் மிகப்பெரிய மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் ஒரு வீடும், தேநீர் கடை ஒன்றும் சிக்கியது. முதற்கட்டமாக அப்போது அங்கிருந்தவர்களில் ஏழு பேர் இந்த மண் சரிவில் சிக்கிருக்கலாம் எனத் தகவல் வெளியாகி இருந்தது.
இதனையடுத்து இந்த மண் சரிவில் மொத்தம் 11 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அதே சமயம் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர்கள் சின்னண்ணன் (வயது 56), சரவணன் (வயது 34), முருகன் உள்ளிட்ட 3 பேர் சிக்கி உயிரிழந்தனர்.
இதில் சரவணன் பாதி உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள சரவணனின் உடல்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாமக்கல் ஆட்சியர் உமா உயிரிழ்ந்த சரவணனின் குடிபத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது சரவணனின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என உறுதியளித்தார். இதற்கிடையே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.