திருச்சி தாராநல்லூர் அருகே தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற காவடி ஆட்டத்துடன் பழனிக்குப் புறப்பட்ட பாதயாத்திரை குழு, மேளதாளங்கள் முழங்க திருக்குடையுடன் புறப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தை மாதம் என்றாலே பழனி முருகன் ஆலயத்திற்குக் காவடி எடுத்துச் செல்வது, பால்குடம் எடுப்பது மற்றும் பாதயாத்திரையாகச் சென்று வழிபடுவது என்பவை வழக்கமான நிகழ்வாக உள்ளது.
அந்த வகையில், திருச்சி வடக்கு தாராநல்லூரில் இருந்து வருடந்தோறும் 200க்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் காவடி சுமந்து பாதயாத்திரையாக பழனி அருள்மிகு பாலதண்டாயுதபானி கோவிலுக்குச் சென்று வருகின்றனர்.
இன்று வடக்கு தாராநல்லூரில் உள்ள முருகன் கோவிலில் இருந்து தென் மாவட்டங்களில் சிறப்பு வாய்ந்த காவடி ஆட்டத்துடன் தெருக்களில் வலம் வந்து பாதயாத்திரையாகப் பழனிக்கு செல்ல புறப்பட்டனர். மயில் தோகைகள் நிறைந்த காவடியை இளைஞர்கள் சுற்றி சுழற்றி ஆட அதனைப் பார்த்து சிறுவர்கள், கற்றுக்கொண்டு காவடி ஆட்டம் ஆடியது காண்பதற்கு அழகு வாய்ந்ததாக இருந்தது.