தேவாலய தேர் பவனியின் போது, ரவுடிகள் உள்ளிட்ட 4 பேரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக இருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மேல குமரேசபுரத்தில் புனித சகாய அன்னை தேவாலயம் அமைந்துள்ளது. அதன் 39 ஆவது ஆண்டு திருத்தேர் பவனி நேற்று நடைபெற்றது. தேர்பவனி தொடங்கியது முதலே அவ்வப்போது ஆங்காங்கே சிறு சிறு தகராறுகள் ஏற்பட்டுள்ளது. ஞாயிறு அதிகாலை, வேளையில் அசோக்நகர் பகுதியை சேர்ந்த சரவணகுமார் மகன்கள் கார்த்திகுமார் (வயது 22), சுரேஷ்குமார் (வயது 22), ரௌடி கார்த்திக்குமார் (எ) முயல் கார்த்தி, அவரது சித்தப்பா மகன் ரஞ்சித் ஆகிய 4 பேரும் தேர்பவனி (சப்பர) நிகழ்வில் பங்கேற்று, சப்பரம் முன்பு ஆடிக்கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் (வயது 53) என்பவர், தேர்பவனியில் ஆடிக்கொண்டிருந்த 4 பேரையும் அரிவாளால் வெட்டினாராம். இதில் 4 பேரும் காயமடைந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் திருவெறும்பூர் அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் முயல் கார்த்தியின் கூட்டாளி பிரவீன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.