
திருச்சியில் துணிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றம் மைதானத்தில் செயல்பட்டு வந்த துணிக்கடை ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றிய சில நிமிடங்களில் மளமளவெனப் பரவி கடை முழுவதும் தீ ஆக்கிரமித்தது. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தில்லை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் நள்ளிரவில் இந்த தீ விபத்து நடைபெற்றதால் மர்ம நபர்கள் யாரேனும் வேண்டும் என்றே இந்த சம்பவத்தை செய்தார்களா? என்பது குறித்தும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.