திருச்சி மாவட்டம், பெரகம்பியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவர் மீதான அடிதடி வழக்கில் சிறைக்கு அனுப்பாமல் குற்றத்தை குறைத்து பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவிக்க லஞ்சமாக 6000 ரூபாய் கேட்டது தொடர்பாக கடந்த 01.11.2006 அன்று அப்போதைய சிறுகனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வராஜ் என்பவர் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். வழக்கானது திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவுற்று இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் வழங்கிய தீர்ப்பில், முன்னாள் காவல் ஆய்வாளர் செல்வராஜ் லஞ்சப் பணம் கேட்டுப் பெற்ற குற்றத்திற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதமும், அபராதத்தைக் கட்டத் தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனையும் மற்றும் அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேஷ் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை பொறிவைத்து பிடித்தும், முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அம்பிகாபதி புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியும் மற்றும் ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற அரசு சிறப்பு வழக்குரைஞர் சுரேஷ்குமார் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்துள்ளார்கள்.