திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ்.கல்லுக்குடியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பாபு (வயது 28). சமயபுரம் கடைவீதியில் மாலை கட்டும் வேலை செய்து வந்துள்ளார். வெளியூரிலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை கோயிலுக்கு அழைத்து செல்வதில் பாபுவிற்கும் வி.துறையூரைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 6ந் தேதி சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை பாரில் பாபு மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த 5க்கும் மேற்பட்டோர் பாபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார் கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மாகாளிக்குடி, வி.துறையூரைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே முக்கியக் குற்றவாளிகளான வி.துறையூரைச் சேர்ந்த வெங்கடேசன், கணேஸ், விநாயகமூர்த்தி ஆகிய 3 பேர் கடந்த 9ஆம் தேதி நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரணடைந்த மூன்று பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சரணடைந்த மூன்று பேரையும் சமயபுரம் போலீசார் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3ல் மனு தாக்கல் செய்து விசாரணைக்காக சமயபுரம் அழைத்து வந்தனர். அங்கு கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள்கள் மற்றும் துணிகள் மறைத்து வைக்கப்பட்ட இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்று அரிவாள் மற்றும் துணிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கொலை சம்பவம் குறித்து குற்றவாளிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி பின்னர் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3ல் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.