Skip to main content

             வாக்குப் பெட்டிகளை மாற்றி வைத்து முறைகேடு.. அ.ம.மு.க வேட்பாளர் தர்ணாவால் பரபரப்பு

Published on 18/04/2019 | Edited on 18/04/2019

 

    திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் வாக்குப் பெட்டிகளை மாற்றி வைத்து அ.தி.மு.க வினர் அதிகாரிகள் துணையோடு முறைகேடு செய்துள்ளனர் என்று அ.ம.மு.க வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் ஒரு மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதே போல கறம்பக்குடி பகுதியில் வேட்பாளரின் மகள் அ.ம.மு.க வினர் துணையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

v

  

 திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகள் இணைந்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் மற்றும் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த சாருபாலா தொண்டைமான் அ.ம.மு.க வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.திகவை சேர்ந்த தர்மபுரி டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார். 

 

v

  

 வாக்கு பதிவு இயந்திரத்தில் முதல் இடத்தில் தே.மு.தி.க வேட்பாளரின் சின்னமும் 17 இடத்தில் அதாவது இரண்டாவது பெட்டியில் முதல் இடத்தில் பரிசு பெட்டகம் சின்னமும் இருக்கும். அதனால் இரண்டாவது வாக்குப் பெட்டியில் முதல் இடத்தில் பரிசுப் பெட்டகம் சின்னம் இருக்கும் என்று சாருபாலா தொண்டைமான் பிரச்சாரத்தில் வாக்காளர்களுக்கு தெரிவித்து வந்துள்ளார். மேலும் சொந்த மாவட்டம் என்பதால் அதிகமான வாக்குகள் பதிவாகும் என்ற நிலையில் அ.ம.மு.க வினர் காத்திருந்தனர்.


    ஆனால் மச்சுவாடி, கறம்பக்குடி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் முதல் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி இரண்டாவது பெட்டியை முதலில் வைக்கப்பட்டிருந்தது.
    இதனை கண்டுபிடித்த அ.ம.மு.க வினர் வாக்குசாவடி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.  

 

v

 

அதனால் சாருபாலா தொண்டைமான் மச்சுவாடி வாக்குசாவடிக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஒரு மணி நேரம் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். அதன் பிறகு பெட்டி மாற்றி வைக்கப்பட்டது. ஆனால் தேர்தலை நிறுத்த வேண்டும். எங்களுக்கு வர வேண்டிய வாக்குகள் பெட்டி மாற்றி வைத்ததால் முரசு சின்னத்திற்கு சென்றுவிட்டது என்று குற்றம் சாட்டியதுடன் இது அ.தி.மு.க வினர் அதிகாரிகளின் துணையுடன் நடத்திய முறைகேடு என்றனர். மேலும் தேர்தல் பார்வையாளர் கவனத்திற்கு எடுத்த செல்வோம் என்றார்.


    அதே போல கறம்பக்குடி நகரில் 15 பூத்துகளில் 7 பூத்களில் பெட்டி மாற்றி வைக்கப்பட்டிருந்ததுடன் பரிசுப் பெட்டி சின்னம் மெழுகு ஊற்றி மறைக்கப்பட்டிருப்பதை வேட்பாளரின் மகள் ராதா நிரஞ்சன்ராஜாயி கண்டுபிடித்து வாக்குப் பதிவு அதிகாரியிடம் முறையிட்டு பலனில்லை. அவரை போலிசார் வெளியேற்றியதால் அ.ம.மு.க வினருடன் முற்றுகைப் போராட்டம் நடத்தினார். 


அதன் பிறகு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டு மறு தேர்தலுக்கு வலியுறுத் துவோம் என்றனர் அ.ம.மு.க வினர்.

 

சார்ந்த செய்திகள்