திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்தார். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் வாகனங்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை பாயும் என்றும் கூறினார்.
திருச்சி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் மு. அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் மரு.இரா. வைத்திநாதன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப் பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன், த. துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி துணை ஆணையர்கள், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு;- சுரேஷ் (சிபிஐ) :- திருச்சி பாதாள சாக்கடை பணிகளில் சுணக்கம் உள்ளது. ஆகவே அந்த ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளித்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். அதேபோன்று மாநகராட்சியின் பிரதான சாலைகளில் பயனற்ற வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. ஆகவே காவல்துறையுடன் இணைந்து அந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். அதேபோன்று கால்நடைகளை பறிமுதல் செய்யும் போது விதிக்கப்படும் அபராததுக்கு ரசீது வழங்கப்படவில்லை என்ற புகார் உள்ளது அதை சரி செய்ய வேண்டும்.
மேயர் அன்பழகன்:- சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சுரேஷ் (சிபிஎம்):- எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நகர் நல வாழ்வு மையம் அமைக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. மேயர் அன்பழகன்:- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இதேபோன்ற நகர்நல நல்வாழ்வு மையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பார்.
சுஜாதா (காங்கிரஸ்):- திருச்சி மாநகராட்சி நிதியில் நடைபெறும் பணிகளின் தரத்தினை கண்காணித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அப்பீஸ் முத்துக்குமார் (மதிமுக):- திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் உயரம் மிக குறைவாக உள்ளது. அந்த உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். அதேபோன்று திருவானைக்காவல் கோபுர பகுதியில் போக்குவரத்தை சீர் செய்ய புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பைஸ் அகமது (ம.ம.க.):- தென்னூர் மேம்பால பகுதியில் சாலை பேட்ச் ஒர்க் நடந்துள்ளது. இருப்பினும் சரியாக சாலைகள் மேம்படுத்தப்படவில்லை. அதேபோன்று இரட்டை வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மலர்விழி (திமுக): எங்கள் பகுதியில் ஆறு பூங்காக்கள் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. மேயர் அன்பழகன்:- பூங்காக்களை பராமரிக்க, சீரமைக்க அந்தப் பகுதி மக்களுடன் சங்கம் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோ.கு.அம்பிகாபதி (அதிமுக):- டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. மேயர் அன்பழகன்:- திருச்சி மாநகராட்சி பகுதியில் அனைத்து பகுதிகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் போன்றவற்றின் விற்பனையை தடுக்க மீண்டும் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்.ஐ.சி. சங்கர் (சுயே):- காந்தி மார்க்கெட் புதிய மீன் மார்க்கெட்டில் 148 கடைகள் கட்டி முடிக்கப்பட்டு வாடகைக்கு விடும் தருவாயில் உள்ளது. பழைய மீன் மார்க்கெட் 44 வியாபாரிகளுக்கு கடைகளை கொடுக்க முன்வராததால் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விட்டனர். இதனால் ஏலம் விடுவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. மாநகராட்சிக்கு இதனால் இழப்பும் ஏற்பட்டுள்ளது. ஆகவே பழைய வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும்.
கமால் முஸ்தபா (திமுக):- மார்சிங் பேட்டையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கடுமையான இட நெருக்கடி உள்ளது. ஆகவே எங்கள் வார்டுக்கு உட்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில் மாநகராட்சி சார்பில் உலகத் தரம் வாய்ந்த புதிய பள்ளிக்கூடத்தை அக்பர் தெரு பகுதியில் அமைத்திட வேண்டும். அரவிந்தன் (அதிமுக):- திருச்சி மதுரை ரோடு ஹேரலிகிராஸ் கல்லூரி, பள்ளி பகுதியில் மழைக் காலங்களில் மழை நீர் செல்ல வடிகால் வசதியும், அருணாச்சலம் மன்றம் அருகில் உள்ள காலியான இடத்தில் யாத்திரிகர்கள் தங்கும் விடுதியும் அமைக்க வேண்டும் என விவாதம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் 179 தார் சாலைகள், 246 கான்கிரீட் சாலைகள் என மொத்தம் 425 சாலைகள் 67 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.24.91 கோடியில் போடுவதற்கு நிர்வாக அனுமதி வழங்குவது உள்ளிட்ட 74 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.