Skip to main content

கிணற்றில் குளித்ததற்காக கொலை செய்யப்பட்ட வாலிபர்; நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

trichy marungapuri well pathway incident came court judgement

 

கிணற்றில் குளித்ததற்காக வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் மருங்காபுரி துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 31). இவரது கணவர் பாலமுருகன் (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் முடிந்த நிலையில், பாலமுருகன் அவரது மனைவி கலைச்செல்வியின் தந்தை பழனியாண்டி வசித்து வரும் மருங்காபுரி கொடும்பபட்டி சிங்கவயலில் இணைந்து வசித்து வந்துள்ளனர். இதில் பழனியாண்டிக்கும் அப்பகுதியை சேர்ந்த ஆதினமிளக்கி என்பவருக்கும் இடையே ஏற்கனவே பல காரணங்களால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆண்டு ஜனவரி மாதம் கலைச்செல்வி, பாலமுருகன் மற்றும் அவரது மகனுடன் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அங்கு வந்த ஆதினமிளக்கி பாலமுருகனிடம், உன்னுடைய மாமனாருக்கும் எனக்கும் பிரச்சனை இருக்கும் போது ஏன் இங்கு குளிக்க வந்தாய் என பிரச்சனை ஆரம்பித்துள்ளது. இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கையில் கொண்டு வந்த அரிவாளால் பாலமுருகன் மார்பில் நடுவில் குத்தியுள்ளார், அதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதுகுறித்து கலைச்செல்வி வளநாடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. நேற்று (24.03.2023) வழக்கின் இறுதி விசாரணையில் அரசு வழக்கறிஞர் ஆனந்தன் இறுதி வாதம் முடிந்து ஆதினமிளக்கியின் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தங்கவேல் குற்றவாளி ஆதினமிளக்கிக்கு ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கித் தீர்ப்பளித்தார். இதையடுத்து ஆதினமிளக்கியை காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்