![trichy husband and wife issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/KAQlnVzDeOF0CvSAYx6fiDJni29x5N3OLnOr0a3Gn7k/1673244055/sites/default/files/inline-images/trichy-prabu-art.jpg)
மகள்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த கணவனை, மனைவி கொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் இறந்த பின்னர் பிழைப்புக்காகத் தனது 3 மகள்களுடன் திருச்சி மாவட்டம் முசிறிக்கு கூலி வேலைக்காக வந்துள்ளார். அங்குள்ள செங்கல் சூளை ஒன்றில் பணியாற்றிய போது பிரபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்பு அவரை இரண்டாவதாக ரம்யா திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரம்யாவின் மகள்களை பிரபு பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரம்யா அரிவாள் மற்றும் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் பிரபுவின் உடலை அய்யம்பாளையம் காவிரி ஆற்றில் வீசியுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த நிலையில், ஆற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது.
இந்நிலையில் மகனைக் காணவில்லை என பிரபுவின் தந்தை அளித்த புகாரின் பேரில், பிரபுவின் மரணம் தொடர்பாக 4 மாதங்களாக போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு ரம்யா மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் நடத்திய விசாரணையின் இறுதியில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.