நாடு முழுவதும் மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான தேசத் தந்தை காந்தியடிகள் பல போராட்டங்கள் மூலம் மக்களை ஒன்று திரட்டி போராடியவர். அவர் கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் 76வது நினைவு நாளில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகத் திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளியின் மாணவிகள் ஊர்வலமாகச் சென்று திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே அமைந்துள்ள காந்தியடிகளின் அஸ்தி நினைவு மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பள்ளியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் காந்தியடிகளின் பஜனை பாடல்களைப் பாடிக்கொண்டும் போதனைகளை எடுத்துக் கூறியும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். காந்தி அஸ்தி மண்டபத்தில் சேவா சங்கம் பள்ளியின் செயலாளர் சரஸ்வதி, காந்தியடிகள் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியை நாகம்மை உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து மலரஞ்சலி செலுத்தினார்கள்.