திருச்சியில் கடந்த 18 ஆம் தேதி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சை நகர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைக்குள் புகுந்து அரிவாளை காட்டி, மதுபாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். மேலும் இது குறித்து திருச்சி, பாலக்கரை பகுதியில் உள்ள CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இரு நபர்களை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தபோது, இவர்கள் இருவரும் ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதி மற்றும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் புகுந்து அரிவாளை காட்டி மதுபாட்டில்கள் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களிடம் இருந்த இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களை போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர கமிஷனர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.