குல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 15வது குற்றவாளியான கிரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை (நவம்பர் 3, 2018) மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வாலிபர் கோகுல்ராஜ் (23). கடந்த 23.6.2015ம் தேதியன்று வீட்டில் இருந்து கிளம்பிச்சென்ற அவர், 24.6.2015ம் தேதி மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தண்டவாளத்தில் சடலம் கவிழ்ந்து கிடந்தது. தலை வேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
அவர் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த, தன்னுடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்த சுவாதியை காதலித்து வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நாமக்கல் சிபிசிஐடி போலீசார், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். அவர்களில் 15வது குற்றவாளியாக யுவராஜின் கூட்டாளி கிரி என்ற வாலிபர் சேர்க்கப்பட்டுள்ளார்.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு திடீரென்று உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால், சனிக்கிழமையன்று (நவம்பர் 3, 2018) காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி. ஸ்கேன், எக்ஸ்&ரே ஆகியவை எடுப்பதற்காக அழைத்து வரப்பட்டிருந்தார். சிறுநீரக கல், முதுகு வலியால் அவஸ்தைப்படுவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள யுவராஜின் மனைவி சுவிதாவும், கிரியைப் பார்ப்பதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.