வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகஸ்ட் 15ந்தேதி சுதந்திர தின விழாவில் சிறப்புரையாற்றும் போது அறிவித்தார். அதன்படி வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டம் என மூன்றாக பிரிப்பதற்கான பணிகள் அதிகார பூர்வமாக தொடங்கியுள்ளது.
வரும் ஆகஸ்ட் 28 மற்றும் 29ந்தேதி ராணிப்பேட்டை, வேலூர், வாணியம்பாடியில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்கள், சமூக அமைப்புகளிடம் கருத்து கேட்கவுள்ளது அரசாங்கம். இதற்கான அறிவிப்பை அரசும், மாவட்ட நிர்வாகமும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த மக்கள் கருத்து கேட்பில் கலந்துக்கொண்டு கருத்து சொல்லவுள்ளேன். மக்கள் தங்கள் கருத்தை என்னிடம் கூறலாம். அதனை நான் அதிகாரிகள் மத்தியில் பேசுகிறேன் என ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன்(திமுக), புதிய மாவட்டம் அறிவிப்பை தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கிட வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சட்டப்பேரவை வாயிலாக அரசை வலியுறுத்தியதன் பேரில் புதிய மாவட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ஆகவே இதுகுறித்து 29 .8. 19 மற்றும் 30. 8. 19 ஆகிய இரு தினங்கள் கருத்துக்கேட்பு கூட்டம் அரசின் சார்பில் நடைபெற உள்ளது.
ஆம்பூர் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக நான் கருத்துக்களை முன் வைக்கும் பொருட்டு அனைத்து தரப்பு மக்களும் தங்களின் மேலான கருத்துக்களை ஆக்கபூர்வமான ஆலோசனைகளை ஆம்பூர் நகரில் பைபாஸ் சாலையில் ராஜிவ்காந்தி சிலை அருகில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.