நாடாளுமன்ற தேர்தல் களத்தைவிட கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
தொகுதி என்ற அந்தஸ்த்தை இழந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளியூர்களில் இருந்து வெட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிலையில் சொந்த மாவட்டத்தில் இருந்து தி.மு.க கூட்டணி திருச்சி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசரும், அ.ம.மு.க வேட்பாளர் சாருபாலா தொண்டைமானும் களத்தில் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை வந்து கூட்டணி கட்சியினரை சந்தித்த திருநாவுக்கரசர்.. என்னை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கூட எனக்கு போட்டி தான். அவர்களையும் குறைத்து மதிப்பிடமாட்டேன். புதுக்கோட்டை தொகுதி பறிக்கப்பட்ட நிலையில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நானே வாதாடினேன் பலனில்லை. மறு சீரமைப்பு வரும் போது நிச்சயம் தொகுதியை மீட்டு கொண்டு வருவேன். அதனால் நோட்டாவுக்கு ஓட்டு போடுவதை குறைத்துவிட்டு அந்த ஓட்டை எனக்கு போடுங்கள் என்று பேட்டி கொடுத்தார்.
இந்த நிலையில் கடந்த முறை நோட்டாவின் வாக்குகளே என் வெற்றியை பாதித்தது என்பதை உணர்ந்த அ.ம.மு.க வேட்பாளர் சாருபால தொண்டைமனும் தொகுதியை மீட்க எனக்கு வாக்களியுங்கள் என்றார். அடுத்தடுத்து இருவரும் புதுக்கோட்டையில் இருந்தே வாக்கு சேகரிப்பை தொடங்கினார்கள்.
இந்த நிலையில் வெள்ளிக் கிழமை மதியம் புதுக்கோட்டையில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த திருநாவுக்கரசர்.. தொழுகை நேரம் என்பதால் ஒரு பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். அதேபோல அதே இடத்தில் அ.ம.மு.கவினரும் தங்கள் சின்னமான பரிசுப் பெட்டியை வைத்துக் கொண்டு வாக்கு சேகரித்தனர். வாக்கு சேகரிப்பு முடிந்த பிறகு திருநாவுக்கரசர் அங்கிருந்து காருக்கு செல்ல.. அருகில் நின்ற அ.ம.மு.க நிர்வாகிகள்.. அண்ணே பரிசுப் பெட்டிக்கு ஓட்டு போட்ருங்கண்ணே என்று சொல்ல.. தம்பி எனக்கு கை சின்னத்துக்கு ஓட்டு போட்ருங்க தம்பி என்று அவரும் ஓட்டு கேட்டார்.
இரு தரப்பும் சந்தோசமாக வாக்கு சேகரித்துக் கொண்டதை அருகில் நின்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அரசியல் ஆரோக்கியம் என்பது இது தான்.. போட்டி என்பது வேறு.. அப்பறம் எல்லாரும் ஒன்று தானே.. அந்த தன்மை திருநாவுக்கரசர் போல எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்கும் வரனும் என்றனர்.