Skip to main content

கிடப்பில் கிடக்கும் திருச்சி மேம்பாலம்.. மாவட்ட ஆட்சியர் பதில்

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

Trichy flyover District Collector's answer

 

திருச்சி மாநகரில் மிகவும் பழமையான மேம்பாலமாக திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் உள்ளது. மிகவும் பழமையான இந்த மேம்பாலத்திற்குப் பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டது. இந்தப் புதிய பாலத்தை இரண்டு கட்டங்களாக கட்ட திட்டமிட்டு, ரூ. 80 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. 

 

இதில் முதற்கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து, திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்தது. இது தற்போது மக்கள் பயன்பாட்டிலும் உள்ளது. 

 

ஆனால், சென்னை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணி இன்னும் நிறைவடையாமலே இருந்தது. இதற்கு காரணம், பாலம் அமைக்க ராணுவத்திற்கு சொந்தமான 67 சென்ட் நிலம் தேவைப்படுகிறது. அந்த இடம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டால்தான் பாலம் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யமுடியும். ஆனால், ராணுவ இடத்தை ஒப்படைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதால் கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

 

இதற்கிடையே இந்தப் பாலம் கட்டுமான பணியை முழுமையடைய செய்ய தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அது மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நடந்து முடிந்து, நீதிமன்றமும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டது. 

 

இந்நிலையில், இராணுவத்திற்குச் சொந்தமான 67 சென்ட் இடத்துக்கு நஷ்ட ஈடாக 5 கோடியே 71 லட்சத்து 66 ஆயிரத்து 785 ரூபாயை கடந்த 2014ஆம் ஆண்டு ஒதுக்கியிருப்பதாகவும், தமிழ்நாடு காவல்துறைக்கு சொந்தமான தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் இடத்தை ஒப்படைக்க தடையில்லா சான்று வழங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறை செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தின் முடிவுகளை எடுத்துக் காட்டியும் திருச்சி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

 

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அந்தக் கடிதத்தை டெல்லியில் உள்ள ராணுவ அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார். இதனால் விரைவில் ராணுவ இடம் கிடைக்கும் என்றும் அனுமதி கிடைத்த உடனே மேம்பால பணிகளை தொடங்க தயாராக இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்