10 வருடத்திற்கு முன்பு திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்த பாஸ்போர்ட் எல்லாம் காணாமல் போனது. அப்போது போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் எடுக்கப்படுகிறது என்கிற குற்றசாட்டும், அதன் பிறகு சி.பி.ஐ விசாரணை நடந்தது. இந்தநிலையில் போலி பாஸ்போர்ட், போலி ஆவணங்கள் எல்லாம் இல்லாமல் இருந்த இந்த நேரத்தில் திருச்சியில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரிக்கப்படுவதாக திருச்சி க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் டிஎஸ்பி மணிகண்டன் மற்றும் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் பேரில் திருச்சி பெரிய மிளகுபாறை சேர்ந்த செபஸ்டியன் சிங்கராயர், காஜா பேட்டையை சேர்ந்த முஹம்மது காசிம் மற்றும் சிந்தாமணியை சேர்ந்த பழனிவேல், கண்ணையா ராஜ் ஆகிய நால்வரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் செபஸ்டின் சிங்கராயர் மற்றும் முகமது காசிம் ஆகியோரும் தங்கள் வீடுகளிலும் பழனிவேல், கண்ணையா ஆகிய இருவரும் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அருகே உள்ள ஒரு கடையிலும் போலி ஆவணங்கள் மூலம் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்தது தெரியவந்தது .மேலும் வெளிநாட்டிற்கு சென்று வந்ததுபோல் பாஸ்போர்ட்டில் அரசு முத்திரை போட்டுக்கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்மந்தப்பட்ட 4 பேரின் வீடுகள் மற்றும் கடைகளில் சோதனை செய்தபோது போலி பாஸ்போர்ட் தயாரிப்பதற்கான போலி அரசு முத்திரை, கம்ப்யூட்டர், ஸ்கேனர், பிரிண்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் நால்வரையும் கைது செய்த க்யூ பிராஞ்ச் போலீசார் திருச்சி 2வது மாஜிஸ்திரேட் திரிவேணி முன் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.