திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு உள்ளடி வேலைகளை பார்த்திருக்கிறார்கள் தி.மு.க.வினர். முசிறி நகராட்சிக்கு உட்பட்ட 19- வது வார்டில் தி.மு.க. நகரச் செயலாளர் சிவகுமாரின் மனைவி கலைச்செல்வி தி.மு.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
முதல்கட்டமாக தன்னுடைய மனைவியை எதிர்த்து போட்டியிடக் கூடிய அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சி வேட்பாளர்கள் பலம் குறைந்த வேட்பாளர்களாகக் களத்தில் இறக்கிவிட்டு, தி.மு.க.வில் யாரெல்லாம் சேர்மன் பதவிக்கு போட்டியாக வருவார்கள் என்பதை அறிந்துக் கொண்ட சிவக்குமார், 23- வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் செல்வி, 16- வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியா, 14- வது வார்டில் போட்டியிட்ட மாணிக்காயி, உள்ளிட்டவர்களைத் திட்டமிட்டு தோல்வியடைய செய்திருக்கிறார்.
இதில் மீனாட்சியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிவக்குமாரின் அக்கா மகளான செண்பக பிரதீபாவை களத்தில் இறங்கியிருக்கிறார். அதேபோல், கடந்த 2001- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகக் களம் கண்ட விவேகானந்தன் என்பவரின் அண்ணன் மனைவி செல்விக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி சந்துருவின் மனைவி சத்யாவிற்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல், பைனான்சியர் தங்கவேல் பிள்ளைகள் மனைவி மாணிக்காயிக்கும், இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த மூன்று வேட்பாளர்களும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களாக இருந்த நிலையில், சிவக்குமார் திட்டமிட்டு இவர்களுடைய வெற்றி வாய்ப்பை தட்டிப் பறித்து இருப்பதாக தி.மு.க.வினர் இடையே தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதற்கு காரணம் தன்னுடைய மனைவியை நகராட்சி சேர்மனாக ஆக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் தான் சார்ந்து இருக்கக் கூடிய கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்து இருப்பது நம்பிக்கை துரோகம் என்று கட்சியினரே புலம்புகின்றனர். மேலும், தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவும், இவ்விஷயத்தில் தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.