கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி திருச்சி அண்ணாசிலை அருகே உள்ள ஒரு தனியார் லாட்ஜில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக ஒருவர் கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், சம்மந்தப்பட்ட லாட்ஜில் சோதனை செய்தபோது கலைஞர்(37), வில்பிரட் மார்ஷெலின்(40) ஆகியோர் இரண்டு இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. உடனே அவர்களை கைது செய்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மேலும் கைதான இருவரும் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வந்ததால், குற்றவாளிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு குண்டர் தடுப்பு ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி மாநகரில் இதுபோன்ற போலி மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்யும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.