வி.வி.ஐ.பி.க்கள் டீ குடிப்பதும் அரசியலாகிவிடுகிறது. சென்னை ஏர்போர்ட்டில் சில நாட்களுக்கு முன் டீ குடிக்கச் சென்றார் ப.சிதம்பரம். ஒரு டீ-க்கு நான் எவ்வளவு தரவேண்டும் என்று கேட்டார். ஒரு டீ ரூ.135 தான் என்று நிர்ணயித்த கட்டணத்தைச் சொன்னார் கடைக்காரர். ஷாக் ஆன சிதம்பரம், அந்தக் கடையில் டீ குடிக்கவே இல்லை. அப்போது, அதிக விலையில் டீ விற்பதை அங்கிருந்த நிருபர்களிடம் கூறிவிட்டு கிளம்பினார்.
டீ கடையில் ப.சிதம்பரத்தைப் போல் நடந்துகொள்ளவில்லை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சமுத்திரம் என்ற குக்கிராமத்தில், சாலையோர டீ கடையில், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூவருடன் சேர்ந்து தானும் டீ குடித்தார். ‘டீ ரொம்ப நல்லாயிருக்கு’ என்று சொல்லிவிட்டு, ரூ.500-ஐ கொடுத்து பாராட்டவும் செய்தார்.
4 டீ-க்கு ரூ.500 கொடுத்ததால், செய்திக் குறிப்பில் அதனை ‘தொகை’ என்று குறிப்பிட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடிக்கு தாராள மனசு எனச் சொல்வதா? ரூ.500 என்பதெல்லாம் அவருக்கு எம்மாத்திரம் என்று கருதுவதா? எப்படி பார்த்தாலும், அட, கூட்டி வகுத்துப் பார்த்தாலும், ஒரு டீயின் விலை ரூ.125 என்றாகிவிடுகிறது.
‘சாலையோர கடையின் டீ-க்கு ரூ.125 கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி எங்கே? ஏர்போர்ட் கடையின் டீ-க்கு. ரூ.135 தர மறுத்து, குடிக்காமல் சென்ற ப.சிதம்பரம் எங்கே?’ என்று அவரவர் இஷ்டத்துக்கு விமர்சிக்கும் போது, ப.சிதம்பரம் தரப்பினர் “என்ன இருந்தாலும் முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் ப.சி. ஒரு ரூபாய் என்றாலும், அதன் மதிப்பை அறிந்தவர். அதனால், ஏர்போர்ட்டில் ப.சி. அப்படி நடந்துகொண்டது சரிதான்! எங்கிருந்தெல்லாமோ பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுவதால், பணத்தின் மதிப்பை அறிந்திடாமல், ஒரு டீ-க்கு எடப்பாடி ரூ.125 கொடுத்ததும், அவரது இன்றைய நிலைக்குச் சரிதான்.” என்று அரசியல் கணக்கை நேர் செய்து, சமாளிக்கிறார்கள்.
அட, போங்கப்பா.. நீங்களும் உங்க டீ அரசியலும்..!