தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் தேசிய ஆணையமும் இணைந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி நடத்தியது. இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி கலந்து கொண்டார்.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்தியபிரியா கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது அவர் மாணவிகளிடம் பேசுகையில், “மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்வது மிகவும் மகிழ்ச்சி. நாங்களும் உங்களை போல இருந்து தான் வந்துள்ளோம். இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது. அதே சமயம் நல்ல கருத்துகளை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் இருந்து வெளியே வருவது உங்கள் கையில் இருக்கிறது.
பெண்கள் என்றாலே பல பிரச்சனைகள் வரும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட சமூக வலைதளங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆகையால், உங்கள் தனிப்பட்ட கணக்குகளை அதற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டால் பல பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரலாம். தமிழ்நாடு அரசு, பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் நாம் அதை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. அதை நாம் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.