Skip to main content

மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கும் பெண்கள்!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

trichy bus womens travelling

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தி.மு.க. தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து தமிழக முதலமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

 

அவருடைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள சரத்தின் படி பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயண திட்டத்தை முதலமைச்சர் கையெழுத்திட்டு துவங்கி வைத்தார்.

 

அதன்படி, தமிழகம் முழுவதும் பெண்கள் மாநகரப் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக, திருச்சி மண்டலத்தில் அரசு பஸ்களில் மூன்று நாளில் மட்டும் 5.64 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

 

திருச்சி மண்டலத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 335 அரசு மாநகரப் பேருந்துகளில் 5.64 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.