Skip to main content

தொடர் வழிப்பறி; விரட்டிய போலீசார்; மாவு கட்டில் முடிந்த சோகம்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

trichy ariyamangalam two persons left and right hand fractured incident 

 

திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதியில் கடந்த 10ம் தேதி மதியம் 3 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்த வயதான பெண்மணியிடம் கழுத்தில் அணிந்திருந்த செயினை இரண்டு மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து அரியமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது  அரியமங்கலம் பகுதி சேர்ந்த நாயுடு தெருவைச் சேர்ந்த ஷேக் தாவூத் (33), சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (24) என்பது தெரியவந்தது.

 

இவர்களை அரியமங்கலம் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இருவரும் மீண்டும் தங்களுடைய கைவரிசையைக் காட்டியுள்ளனர். அரியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் அருகில் இரவு 9 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரிடம் கத்தியைக் காட்டி அவர் கையில் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள் கத்தியால் குத்த முயன்றபோது வாலிபர் கூச்சலிட்டதால் இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இதனிடையே பொதுமக்கள் அரியமங்கலம் காவல்துறையினருக்கு இதுகுறித்து கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நேற்று முழுவதும் தப்பிச் சென்ற இரண்டு வழிப்பறி திருடர்களையும் தேடி வந்த நிலையில், நேற்று மாலை இருவரும் திருவெறும்பூர் பகுதியில் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

 

நேற்று முன் தினம் மதியம் அவர்கள் இருப்பதை அறிந்து காவல்துறையினர் பிடிக்கச் சென்ற போது, அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். காவலர்கள் அவர்களை விரட்டிச் சென்றபோது, இருவரும் தப்பிச் செல்ல முயன்றதில் எதிர்பாராத விதமாக முட்புதருக்குள் தடுமாறி விழுந்து ஷேக் தாவூத்தின் இடது கையும், ரஞ்சித்தின் வலது கையும் உடைந்தது. இதில் இருவரையும் மீட்டு காவல்துறையினர் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து கைகளில் மாவு கட்டு போட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்