கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த “வீட்டிலிருப்போம் விலகியிருப்போம்” என்ற முழக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், வீட்டிலேயே இருப்பவர்களுக்கான உணவு, உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றுவதற்காக பல்வேறு கடைநிலை தொழிலாளர்கள் உழைத்துவருகின்றனர். சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத சூழலிலும் பழுதடைந்த கேஸ் அடுப்புகளைச் சரிசெய்யும் தொழிலாளர்கள் சைக்கிளில் வீடு வீடாகச் சென்று வேலை செய்கின்றனர். ஆன்லைனில் உணவு மற்றும் காய்கறிகளை ஆர்டர் செய்வோருக்கு அவற்றை உரிய நேரத்தில் கொண்டுசேர்ப்பதற்காக ஊழியர்கள் கொளுத்தும் வெயிலிலும் ஓய்வின்றி உழைக்கின்றனர்.
இவ்வாரான தொழிலாளர்கள் ஒருபுறம் இருக்க, சாலையோரங்கள் வசிக்கும் கூலித் தொழிலாளார்கள் ஊரடங்கால் வேலையிழந்து பசியோடு யாரேனும் உணவு தருவார்களா என ஏங்கிக் காத்திருக்கின்றனர். சென்னையில் வீடின்றி பலர் பாலங்கள் அடியில் வசித்து வருகின்றனர். அவர்களின் குழந்தைகள் பசியோடு இருந்தாலும் ஊரடங்கு காலத்தைப் படிப்பதில் செலவு செய்கின்றனர்.