டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைப்பெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு ஜனவரி 10 முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. இந்நிலையில், இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த போராட்டத்தை வெளிப்படுத்த நினைத்த காங்கிரஸ் கட்சி, இதுகுறித்த ஆலோசிக்க கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் கட்சிகள் அனைத்திற்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.
இன்று நடந்த இந்த கூட்டத்தில், பல முக்கிய கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மம்தா பானர்ஜி மற்றும் மாயாவதி அறிவித்த நிலையில், ஆம் ஆத்மீ கட்சியும் பங்கேற்காது என தெரிவித்திருந்தது .
இந்நிலையில் இந்த கூட்டத்தில் திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை, விசிக சார்பில் திருமாவளவன் மட்டும் பங்கேற்றுள்ளார் எனக்கூறப்பட்டுள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு சம்பந்தமாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இன்று காலை வருகை தந்திருந்தார். எனவே இந்த கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது வரை திமுக சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.