விமான நிலையத்தில் இருந்த பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் நோக்கி செல்லும் இண்டிகோ விமானம் நேற்று புறப்பட தயார் நிலையில் இருந்தது. இதனையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சந்தோஷ் ராஜம் (வயது 23), என்பவரை சோதனை செய்ததோடு அவரின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது.
அப்போது அவரது உடைமையில் வெடிக்காத 5.56 மிமீ அளவுள்ள துப்பாக்கி தோட்டா இருப்பதை பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி அடைந்து அதனை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து சந்தோஷ் ராஜத்தை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த துப்பாக்கி தோட்டா எங்கிருந்து தனது உடைமைக்கு வந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் இருந்து முழு தகவல்களையும் பெற்றுக்கொண்டு போலீசார் அவரை ஜாமினில் விடுதலை செய்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.