விழுப்புரத்தில் பழங்குடியின இருளர் பெண்ணுக்கு தொலைபேசி மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக விஏஓ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் நல்லாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இருளர் பெண் ஒருவரின் கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவருக்கான இறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக நல்லாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர்ராஜை அந்த பெண் அணுகியுள்ளார். அப்பெண்ணிற்கு விதவைகளுக்கான உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறிய விஏஓ ஆரோக்கிய பாஸ்கர் ராஜ், அப்பெண்ணின் மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டு அடிக்கடி அவருக்கு போனில் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் வேதனையடைந்த பழங்குடியின பெண் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விஏஓ ஆரோக்கிய பாஸ்கர்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.