தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்கிறார். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு மறுநாள் இரவு 8.30 மணிக்கு முதல்வர் சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வரும் ஜூன் 3ஆம் தேதி கிண்டி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும் என நேரில் அழைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஆதரவு தெரிவித்து பதில் கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் வேண்டும் என்பதை குடியரசுத் தலைவரிடம் நேரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.