சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியின் 5 வயது மகள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவரின் வளர்ப்பு நாய்கள் (ராட் வைலர் இன வகை) கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி கதறி அழுததைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து நாயை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டனர். நாய்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறுமியின் மருத்துவ செலவை புகழேந்தி ஏற்றுக் கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் வளர்ப்பு நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ராட் வைலர் இன நாய்களை வைத்திருந்ததாக போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் பேசுகையில், “சிறுமியைக் கடித்த ராட் வைலர் நாய்களுக்கு உரிமையாளர்கள் வளர்ப்பு உரிமம் பெறவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏன் உரிமம் பெறவில்லை என விளக்கம் கேட்டு உரிமையாளர் புகழேந்திக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணைக்குப் பின்னர் கால்நடை துறை உடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்''எனத் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தலை கொடுக்கும் அசுர குணங்களைக் கொண்ட ராட் வைலர் நாயின் அதிர்ச்சி கொடுக்கும் பண்புகள் அசர வைக்கிறது. முழுமையாக வளர்ச்சியடைந்த திடமாக உள்ள மனிதர்களைக் கூட அசால்டாக கடித்துக் குதறும் பலம் கொண்டது ராட் வைலர். அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகளில் மட்டுமே இந்த ராட் வைலர் நாய்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக இவை ஆடு, மாடு, குதிரை போன்றவை வளர்க்கப்படும் பண்ணைகளில் பாதுகாப்பிற்காக வளர்க்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே இந்த நாயை வளர்த்து வருகிறார்கள். காரணம் இதற்கான பராமரிப்பு செலவு என்பது அதிகம். பிரத்தியேகமாக இவை பாதுகாப்பு பணிகளுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டு வருகிறது.
தான் இருக்கும் இடத்தை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற சுபாவம் கொண்டது ராட் வைலர் நாய்கள். சில நேரங்களில் உரிமையாளர்களுக்கு கூட கட்டுப்படாமல் இயங்கும் இயல்பு கொண்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு அரக்கோணத்தில் உரிமையாளரையே ராட் வைலர் நாய் கடித்துக் கொன்றுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஹரியானாவில் பண்ணையின் ஊழியரை கடித்து கொன்று தின்றுள்ளது. 2021 சிதம்பரத்தில் பண்ணை ஊழியரை ராட் வைலர் நாய் கடித்துக் கொன்றது. இப்படி பல்வேறு கொலை ஆவணங்களிலும் இடம் பெற்றுள்ளது ராட் வைலர்.
மற்ற நாய்களை விட ராட் வைலர் தாக்கினால் எலும்பு முறிவு ஏற்படும் அளவிற்கு அதன் தாக்குதல் வலுவாக இருக்கும். ஒரே இடத்தில் அடைத்து வைத்திருந்தால் கோபம் வரும் சுபாவம் கொண்டது. அதேபோல புதிய நபர்கள், விலங்குகளை பார்த்தால் கோபம் ஏற்படும் சுபாவம் கொண்டது. இந்த நாய்களின் வாய் தாடைகளுக்குள் சிக்கினால் சிங்கத்தால் கூட தப்பிக்க முடியாது என்கின்றனர் விலங்கு ஆர்வலர்கள். இந்தியாவில் ராட் வைலர் குட்டிகள் 80 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்மையில்தான் ராட் வைலர் நாய்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. அதேநேரம் மத்திய அரசு விதித்த அந்தத் தடையை டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் நீக்கி இருந்ததும் குறிப்பிடத்தகுந்தது.