Skip to main content

திடீர் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து துண்டிப்பு...

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

மாதிரி படம்


கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

 

இந்நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கல்வராயன் மலையில் பெரிய, சிறிய என 150 கிராமங்கள் உள்ளன. மலைப் பகுதியில் ஆங்காங்கே ஓடைகளும் காட்டாறுகளும் உற்பத்தியாகி ஓடுகின்றன. இங்கிருந்து கோமுகி நதி, மணிமுத்தாறு நதி, வெள்ளாறு வராகநதி இப்படிப் பல நதிகள் உருவாகி விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்ட மக்களுக்கு தண்ணீரைத் தருகிறது.


இங்குள்ள கிராமங்களில் உள்ள ஊர்களுக்குச் செல்ல வேண்டுமானால் அங்கு உற்பத்தியாகும் ஆறுகளையும் ஓடைகளையும் கடந்துதான் செல்லவேண்டும். அவைகளின் குறுக்கே சின்னச் சின்ன தரைப்பாலங்கள் மட்டுமே உள்ளன. இதனால் அதிக மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல முடியாது. அதே போன்று நேற்று பெய்த மழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தொரகடிபட்டு ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சின்னதிருப்பதி, எட்டரை, பட்டிமேல், பாச்சேரி உள்ளிட்ட சுமார் 30 கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் பாதை துண்டிக்கப்பட்டது.

 

கன மழை பெய்ததாலே மலைக் கிராமங்கள் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்ள முடியாமல் துண்டிக்கப்படுகின்றன. எனவே இம்மலையில் உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் இங்கு உற்பத்தியாகும் ஆறுகள் ஓடைகளில் பெரிய பாலங்கள் கட்டினால் போக்குவரத்து எப்போதும் சீராக இருக்கும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள் மலைக்கிராம மக்கள். தற்போதைய மழையினால் கச்சராபாளையம் அருகிலுள்ள கோமுகி அணை முழு அளவில் நிரம்பி, உபரி நீர் திறந்து விடும் நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே கோமுகி அணை நிரம்பியுள்ளது, மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்