‘இந்து திருமணச் சட்டத்தில் மணப்பெண் என்ற சொல், பெண்ணை மட்டுமின்றி, பெண்ணாக மாறியவரையும் சேர்த்தே குறிக்கிறது..’
-வழக்கு ஒன்றில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் கூறப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டியிருந்தது.
அந்த வழக்கு இதுதான் -
ஆணாக இருந்து பெண்ணாக மாறிய ஸ்ரீஜாவும், அருண்குமார் என்பவரும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தூத்துக்குடியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்தத் திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய விண்ணப்பித்தபோது, அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ‘இந்து திருமணச் சட்டம் பிரிவு 5-ன் கீழ், மணப்பெண் என்றால், திருமணம் செய்துகொள்ளும் பெண்ணை மட்டுமே குறிக்கும்’ என்ற அரசு தரப்பு வாதம் நிராகரிக்கப்பட்டது. மணப்பெண் என்றால், பிறப்பிலேயே பெண்ணாக பிறந்தவர் மட்டுமே என நிலையாகவும், மாற்ற முடியாத வகையிலும் பொருள் கொள்ளமுடியாது என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.
தற்போது விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகிலுள்ள வலையங்குளத்தில், ஹரினா என்ற திருநங்கையை, அவரது தாய்மாமன் மகன் கருப்பசாமி, கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். முதலில் பெற்றோர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், பிறகு இருவரது தீவிர காதலை ஏற்று, திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர்.
இருவீட்டார் ஒப்புதலுடன், காரியாபட்டியிலுள்ள சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், ஹரினா – கருப்பசாமி திருமணத்தை, உறவினர்களுடன், அப்பகுதியிலுள்ள திருநங்கைகளும் இணைந்து நடத்தி வைத்துள்ளனர்.
ஹிஜிரா, கின்னர், கோதி என மூன்றாம் பாலினத்தவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே, திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு தனிநபர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றமும் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஜோயிடா மொண்டல் என்ற திருநங்கை, இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதியாக முடிந்திருக்கிறது. காரியாபட்டியில் நடந்த திருமணம் போன்ற சடங்குகளில் மட்டுமல்ல, சமூகத்தாலும் முழுமனதோடு, திருநங்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.