திருவள்ளூர் மாவட்டம் அலமாதி கிராம நெடுஞ்சாலையில் மாபு ஷெரிப் என்பவர் வாகன வாடகைக்கு பஞ்சர் போடும் கடை வைத்துள்ளார். இவரிடம் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கலாம் என்ற தொழிலாளி பணிபுரிந்து வருகிறார். கடையின் உரிமையாளர் மத்திய உணவுக்காக வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் கடையில் இருந்த கலாம் கைப்பேசி காணொளி காட்சி மூலம் சொந்த ஊரில் உள்ள தனது உறவினர்களுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர் அவரிடம் பணம் தருமாறு கேட்டதாக தெரிகிறது.
உரிமையாளர் இல்லாததால் பணம் தர அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த திருநங்கை தன்னுடன் வந்த மேலும் மூன்று திருநங்கைகளை அழைத்து, பணம் தர மறுத்த வட மாநில தொழிலாளியை நான்கு பேரும் சேர்ந்து வெளியில் இழுத்துப் போட்டு சரமாரியாக தாக்கியதோடு, காலால் எட்டி மிதித்தும், அங்கிருந்த வாகனத்தை கழற்ற பயன்படுத்தப்படும் இரும்பு கம்பியாலும் கொடூரமாக தாக்கி அவரிடமிருந்து கைபேசி, பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இதுதொடர்பான கண்காணிப்பு கருவியில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான அதைத் தொடர்ந்து, வட மாநில தொழிலாளியை கொடூரமாக தாக்கி கைபேசி, பணம் ஆகியவற்றைப் பறித்துச் சென்ற திருநங்கைகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.