தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பேருந்து, புறநகர் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அறிவிப்பால் 16 சிறப்பு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் திருச்சி - கரூர் பயணிகள் ரயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், எழும்பூர் - புதுச்சேரி, திருச்சி - காரைக்குடி, திருச்சி - கரூர், விழுப்புரம் - மதுரை உள்ளிட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நாளை (25/04/2021), மே 2 ஆகிய தேதிகளில் 16 சிறப்பு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு மையங்களும் நாளை (25/04/2021) இயங்காது. டிக்கெட் முன்பதிவு செய்யவும் ரத்து செய்யவும் முன்பதிவு மையங்களை அணுக வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். எனினும் நடப்பு முன்பதிவு கவுண்டர்கள் வழக்கம்போல் செயல்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.