சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஜன் சதாப்தி விரைவு ரயில், மைசூர்- மயிலாடுதுறை விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். சாரதா சேது ராமேஸ்வரம் - அயோத்தி ரயில், தாம்பரம் - செங்கோட்டை, சென்னை - காரைக்கால் ரயில்களை சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் சிதம்பரத்தில் உள்ள அனைத்து கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கோரிக்கையை வைத்து பலமுறை போராட்டம் அறிவிக்கப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்த நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தலைமையில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் அனைத்து கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனையொட்டி சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மி ராணி தலைமை தாங்கினார். சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ரயில்வே நிர்வாக அலுவலர்கள், ரயில் பயணிகள் சங்கத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த 70க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வரும் 16 ஆம் தேதி திருச்சி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் தலைமையில் அனைத்து அதிகாரிகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டு நல்ல முடிவு ஏற்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக 14 ஆம் தேதி நடைபெறும் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.