ரயிலில் கடத்தி வரப்பட்ட 19 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கஞ்சா கடத்தி வந்த பெண்ணையும் கைது செய்தனர். சேலம் வழியாகச் செல்லும் ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த புகார்களின் பேரில் காவல்துறையினர் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதி சேலம் வழியாகச் செல்லும் தன்பாத் & ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலில், ரயில்வே காவல்துறையினர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறினர். அந்த ரயிலில் பின் பக்க பொதுப்பெட்டியில் ஒரு இருக்கையின் அடியில் ஒரு பெரிய பை இருந்தது. அந்தப் பையை எடுத்து சோதித்தபோது, அதில் இருந்து 19 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அந்தப் பையை எடுத்து வந்த பயணிகள் குறித்து விசாரித்தனர். அதே பெட்டியில் டிக்கெட் இல்லாமல் வந்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரித்தபோது, அவர் திருச்சியைச் சேர்ந்த விமலா (55) என்பதும், அவர்தான் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததும் தெரிய வந்தது.
விஜயவாடாவில் இருந்து ஈரோடு வரை ரயிலில் கஞ்சாவை எடுத்துச் சென்று, அங்கிருந்து பேருந்தில் திருச்சிக்கு கடத்திச் செல்ல இருந்ததும், அவர் மீது ஏற்கனவே ஒரு கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து விமலாவை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரையும், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களையும் சேலம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை வசம் ஒப்படைத்தனர்.