ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள திருஞானசம்பந்தர் வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (35).பழைய இரும்புகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். பாலமுருகனுக்கு மதுப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வருவாராம்.
இந்நிலையில், நேற்று காலையில் பாலமுருகனின் மனைவி திருமணி செல்வி (30) வழக்கம்போல் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு சென்று விட்டார். பாலமுருகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், காலை 11 மணியளவில் பாலமுருகனின் நண்பர் ஒருவர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் படுக்கையறையில் உள்ள பேனில் சேலையால் தூக்கிட்ட நிலையில் பாலமுருகன் தொங்கியுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்து,போலீசார் பாலமுருகனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.