
மதுரையில் மூதாட்டி ஒருவர் இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை திருநகர் அருகே உள்ள மாசிலாமணி கிழக்கு தெரு பகுதியில் ஜம்ஜம் என்ற ஸ்வீட் கடைக்கு அருகில் மூதாட்டி ஒருவர் இரவு வேளையில் படுத்து உறங்கி உள்ளார். இந்நிலையில் அதிகாலை 3 மணிக்கு காவல் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் ஃபோன் செய்து மூதாட்டி ஒருவர் அந்த பகுதியில் இறந்து கிடப்பதாகத் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியைச் சடலமாகக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த பொழுது, அந்தப் பகுதியில் இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்த அலெக்ஸ் என்பவன் மூதாட்டியைக் கொன்றது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொலை செய்த இடத்திற்கு ஒன்றும் தெரியாதது போல் நோட்டமிட வந்த அலெக்ஸை போலீசார் கைது செய்தனர். அவனிடம் விசாரணை செய்ததில், போதையில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துக் கொன்றதும், மூதாட்டியின் செல்போனை கொண்டே காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாகத் தகவல் தெரிவித்ததும் தெரியவந்தது.