சென்னை திருவொற்றியூர்- விம்கோ நகர் இடையே இன்று (13/03/2022) முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளது.
இது தொடர்பான சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-1ன் நீட்டிப்புத் திட்டத்தின் கீழ், வண்ணாரப்பேடை முதல் விம்கோ நகர் வரை (9 கி.மீ.) பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையங்களின் அனைத்து பணிகளும் முடிவுற்றது மற்றும் மெட்ரோ இரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்ததின் பேரில், அவ்விரு மெட்ரோ இரயில் நிலையங்கள் இன்று (13/03/2022) முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது என்றும் இவ்விரு மெட்ரோ இரயில் நிலையங்களிலும் மெட்ரோ இரயில்கள் இன்று முதல் நின்று செல்லும் என்று அறிவிக்கப்படுகிறது.
திருவொற்றியூர் விம்கோ நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் பொதுமக்கள், மேற்கண்ட இரயில் நிலையங்களில் மெட்ரோ இரயில் சேவையைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையத்தில் இம்மாதம் மட்டும் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம்.
சென்னை மெட்ரோ இரயில்களில் இரே நாளில் 2 லட்சம் பயணிகள் பயணம்!
சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இம்மாதம் 11/03/2022- ஆம் தேதி மட்டும் 2 லட்சம் பயணிகள் மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணிகளுக்கான சேவையை 2015- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29- ஆம் தேதி தொடங்கியது மெட்ரோ இரயில் சேவை தொடங்கி ஏழு ஆண்டு பூர்த்தி அடைந்து பயணிகளுக்கான பயண சேவையைத் தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது கடந்த 2021- ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ இரயில் முதல் கட்டம் மற்றும் அதன் விரிவாக்கம் திட்டம் நிறைவேற்றி 54.41 கி.மீ. தூரத்திற்கு அதன் இயக்கம் தங்குதடையின்றி முழுமையாக மெட்ரோ பயணிகளுக்கு மெட்ரோ இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது சென்னை மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தன் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை இம்மாதம் மார்ச் 11- ஆம் தேதி அன்று மட்டும் 2 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணத்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு இது ஒரு மைல்கல்லாகவே இருக்கும் இந்த மைல் கல்லையும் தாண்டி புதிய சாதனை படைக்க சென்னை மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க பயணிகளின் வருகை அதிகரிக்க வேண்டும். இந்த சாதனை தொடர இரயில் பயணிகளின் ஆதரவு என்றென்றும் தொடர வேண்டும்." இவ்வாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.