நீர்நிலைகளில் சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் கன்னியாகுமரியில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்டு விட்டு குளத்தில் கை கழுவ முயன்ற சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் பஞ்சலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் உள்ளது மகாதானபுரம். இந்தப் பகுதியில் ராகவேந்திரா கோவில் ஒன்று உள்ளது. கோவிலுக்கு அருகில் தெப்பக்குளம் ஒன்றும் உள்ளது. இந்நிலையில் ராஜேஷ்குமார் என்பவரின் இரண்டு மகள்கள் தனியாக அந்த கோவிலில் சாமி கும்பிட சென்ற நிலையில் கோவிலில் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை வாங்கி சாப்பிட்ட இரண்டு சிறுமிகளும் கைகளை கழுவதற்காக கோயிலை ஒட்டி இருந்த தெப்பக்குளத்தில் இறங்கி உள்ளனர். அப்பொழுது ஒரு சிறுமி தவறி நீரில் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற மற்றொரு சிறுமியும் குளத்தில் குதித்துள்ளார். இதில் இரண்டு சிறுமிகளும் உயிரிழந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்புப்படைக்குத் தகவல் கொடுத்த நிலையில் இரண்டு சிறுமிகளும் சடலமாக மீட்கப்பட்டனர். சிறுமிகளின் உடலைப் பார்த்து உறவினர்கள் அழுதது அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.