கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள தோளாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்துவந்தார். கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலமாக பாடம் படித்துவந்தார். இதற்காக அவரது பெற்றோர் சிறுமிக்கு செல்ஃபோன் வாங்கிக் கொடுத்திருந்தனர்.
படிப்பு முடித்துவிட்டு மீதி நேரத்தில் சிறுமி செல்ஃபோன் மூலம் தனது நண்பர்களுடன் ஃபேஸ்புக் போன்ற செயலிகள் மூலமாக பழகிவந்துள்ளார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு ஃபேஸ்புக் மூலமாக சேலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. நாளடைவில் அவர்கள் நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் செல்ஃபோன் எண்களைப் பரிமாற்றிக்கொண்டு மணிக்கணக்கில் பேசி காதலை வளர்த்துவந்தனர்.
இந்த விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரியவந்ததையடுத்து பெற்றோர்கள் அந்தச் சிறுமியைக் கண்டித்துள்ளனர். இதுகுறித்து அச்சிறுமி அவரது காதலனிடம் கூறியுள்ளார். அதற்கு காதலன், “நான் உன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்கிறேன். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இரு” என்று கூறியுள்ளார். இந்த விஷயம் அச்சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவரிடம் இருந்து செல்ஃபோனை பறித்துக்கொண்டனர்.
இந்த நிலையில், வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமாகிவிட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் காரமடை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, ஃபேஸ்புக் காதல் காரணமாக முகம் தெரியாத வாலிபருடன் அந்தச் சிறுமி சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்துவருகின்றனர்.