Skip to main content

ராட்டையுடன் விவசாயிகள் சத்தியாகிரகம்; மஜகவின் தமிமுன் அன்சாரி  பங்கேற்பு

Published on 15/08/2023 | Edited on 15/08/2023

 

nn

 

இன்று சென்னை பெசன்ட் நகரில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகளின்  25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.

 

ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி காந்திய வழியில், ராட்டையை முன்வைத்து நடைபெற்ற அமைதியான இந்நிகழ்வில், மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி  பங்கேற்று பேசினார்.

 

அவர் பேசியதிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு, “விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு என்றார் காந்தியடிகள். அவரது வழியில் ராட்டையை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தகைய நூதன போராட்டம் பற்றி சிந்திக்கும் தலைமைத்துவம் பி.ஆர்.பாண்டியனிடம் உள்ளது. விவசாய சங்கத்தை துடிப்புடன் கட்டமைத்து, முழு நேரமாக விவசாயிகளுக்காக பாடுபடும் விவசாயப் போராளியாக உருவெடுத்துள்ளார்.

 

நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தப் போது, விவசாயிகளின் பிரதிநிதியாகவே செயல்பட்டேன். விவசாயிகள் என்பவர்கள் கபடமற்ற தொழிலாளிகள். பயிர்களும் வாழ வேண்டும், உயிர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். எனவே, விவசாயிகள் எங்கு பாதிக்கப்பட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். நமது நாட்டில் விவசாயிகள் பல வகையிலும் பாதிக்கப்படுகிறார்கள். மணிப்பூரில் நடப்பது சமூக- இன மோதலாக மட்டும் பார்க்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் பிரச்சனை அதில் உள்ளது.

 

குக்கி இன விவசாயிகளின் மலை நிலங்களை பறித்து கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கும் சதித்திட்டம் அதில் உள்ளது. பழங்குடியின உரிமையை மற்றவர்களுக்கும் கொடுத்து, அதன் வழியாக நிலங்களை பறித்து, அதானி - அம்பானிகளுக்கு வழிவிடும் சதி அதில் அடங்கியுள்ளது. அதேபோல் ஹரியானாவில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு பின்பும் ஒரு காரணம் உள்ளது.

 

nn

 

அந்த முஸ்லிம்கள் பெரும்பாலும் விவசாயிகள். அவர்களிடம் சொந்த நிலங்கள் உள்ளது.டெல்லியில் நாடு தழுவிய அளவில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அவர்களுக்கு உணவு அனுப்பி உதவியவர்கள் அவர்கள்தான். அதனாலேயே இப்போது குறி வைக்கப்பட்டுள்ளார்கள். இதை அறிந்து கொண்ட ஹரியானா விவசாயிகள், தங்களது சக முஸ்லிம் விவசாயிகளுக்கு ஆதரவாக திரண்டுள்ளனர். எனவே, விவசாயிகள் நாட்டில் நடைபெறும் பிரச்சனைகளின் பின்னணி நுட்பங்களை புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

இப்போது நாம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளைத் தான் வைக்கிறோம். நெருக்கடி கொடுக்கும் நோக்கம் இல்லை. எனவே, இக்கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அடுத்த கட்ட வளர்ச்சியையும், நவீன தொழில் நுட்பத்தையும், உலகளாவிய சந்தையையும் அறிய அவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி பட்டறை (Workshop) நடத்த பி.ஆர்.பாண்டியன் திட்டமிட வேண்டும். ஏனெனில், உலகளாவிய உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்புகளை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

தாய்லாந்து விவசாயிகள் தங்களது உற்பத்தியை உலக சந்தைக்கு கொண்டுச் செல்கிறார்கள். நுங்கையும், இளநீரையும் கூட டின்களில் அடைத்து விற்கிறார்கள். இங்கு நாம் இளநீரின் மகத்துவத்தையும், பனை மரத்தின் பொருட்களையும் உலகளவில் சந்தைப்படுத்தாமல் உள்ளோம். உள்நாட்டில் தென்னையிலிருந்து உருவான 'நீரா பானம்’ என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. விவசாயிகளின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சியாகும்”என்றார். 

Peasants satyagraha with rattai

 

முன்னதாக பேசிய பி.ஆர்.பாண்டியன் அவர்கள், கடந்த 2016 - 2021 காலத்தில் விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளையும் இவர் மூலமாக சட்டமன்றத்திற்கு நாங்கள் கொண்டு சென்றோம் என்றும், இப்போதும்  மக்களுக்கான போராட்ட களத்தில் முதல் நபராய் இருப்பவர் நமது தமிமுன் அன்சாரி என்றும் பாராட்டி பேசினார்.

 

இன்றைய போராட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:-

 

நில ஒருங்கிணைப்பு சட்டம்- 2023 ஐ திரும்ப பெற வேண்டும்; நெல்லுக்கு  குவிண்டாலுக்கு 3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு 4 ஆயிரம் தர வேண்டும்;தமிழ்நாட்டுக்கென தனி வேளாண் காப்பிட்டு திட்டத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும்; காவிரி , முல்லை பெரியாறு உரிமைகளை பாதுகாத்திட வேண்டும்; விவசாய நிலங்களை கையகப்படுத்தி போடப்படும் சாலைகளில் சுங்க கட்டண வருவாயில் (TOLL GATE) ஒரு பகுதியை அந்த நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட  25 கோரிக்கைகளுடன் இன்றைய சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.

 

 

 

சார்ந்த செய்திகள்