காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் ஜே.எஸ்.ஆறுமுகம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்திற்கு இன்று காலை சுமார் 9.50 மணிக்கு வரவேண்டிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் மற்றும் ஊத்தங்கரை டி.எஸ்.பி அமலா அட்மின் தலைமையிலான ஐம்பதுக்கு மேற்பட்ட போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் ரயில் மறியல் போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அப்போது திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து இருந்த காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "மோடி தலைமையிலான அரசு ஜனநாயகத்தை படுகொலை செய்து சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறது. அரசியல்வாதிகளின் குரல்வளையை நசுக்குகிறது. இவ்வாறு அடக்குமுறை தொடர்ந்தால் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சாமல்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.