கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.
மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.