சமூக வலைதளங்களில் வரும் அவசியமற்ற லிங்குகளை கிளிக் செய்யக் கூடாது எனவும், ஓடிபிக்களை ஷேர் செய்யக் கூடாது எனவும் தொடர்ந்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டாலும், தெரியாமல் சிலர் சிக்கிக் கொள்கின்றனர். இப்படி ஒரு சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியைச் சேர்ந்தவர் சௌந்தர். இவர் சேலம் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை 6:54 மணிக்கு வாட்ஸ் அப் மூலம் ஐசிஐசிஐ பேங்கில் இருந்து லிங்க் ஒன்று வந்ததாக கூறுகிறார். அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் தங்களிடம் கடன் வாங்கி உள்ளீர்கள். எனவே மாதம் 6,800 ரூபாய் கட்ட வேண்டும். இதை நீங்கள் கட்டவில்லை என்றால் உங்களுடைய போட்டோக்களை மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டல் குறுச்செய்திகள் வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து சௌந்தர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செய்தியாளர்களைச் சந்தித்துத் தெரிவித்துள்ளார்.