சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று (27.06.2024) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது அத்துறையின் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பல்வேறு அறிவுப்புகளை வெளியிட்டார். அதில், “சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் உள்ள மாணவர் விடுதி ரூ. 25 கோடி மதிப்பீட்டில் உயர் செயல்திறன் விடுதியாக மேம்படுத்தப்படும். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பாகப் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்டும். அதாவது 100 வீரர் வீராங்கனைகளுக்கு 3% விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணி ஆணை வழங்கப்படும்.
ரூ.100 கோடியில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இந்தியாவிலே முதல் முறையாக தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவப்படும். ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின்கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களும் விளையாட்டு அரங்கங்களும் சீரமைக்கப்படும்.
ரூ.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 22 சட்டமன்றத் தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும். மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில் ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் அமைக்கபடும். தென் தமிழ்நாட்டைச் சார்ந்த நீச்சல் வீரர் - வீராங்கனைகள், சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும். ரூ.10 கோடியில் மதிப்பீட்டில் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களிலும் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
மாவட்ட விளையாட்டு வளாகத்தில் தற்போதுள்ள ஹாக்கி ஆடுகளம் செயற்கை இழை ஆடுகளமாகத் தரம் உயர்த்தப்படும். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மாணவர்கள் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையாக இது அமையும். கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழர் பாரம்பரியத் தற்காப்புக் கலைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். அதன்படி களரி, அடிமுறை, சிலம்பம், சுவடுமுறை, மல்யுத்தம், குத்துவரிசை, அடிதடை, வர்மம் போன்ற தென் தமிழ்நாட்டின் பாரம்பரியத் தற்காப்புக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் சீரிய முயற்சி ஆகும்” எனத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.