அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ளது இலந்தைகூடம். இந்த ஊரைச் சேர்ந்தவர் விவசாயி ஞானசேகர். இவர் தனது விவசாய பணிகளுக்காக டிப்பர் இணைக்கப்பட்ட டிராக்டர் ஒன்று வாங்கி அதை விவசாயத்திற்குப் பயன்படுத்திவந்துள்ளார். விவசாயம் இல்லாத நேரங்களில் தனது வீட்டிற்கு முன்பு அதை நிறுத்திவந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 5ஆம் தேதி இரவு திடீரென்று அவரது டிராக்டர் டிப்பர் இரண்டும் காணாமல் போயுள்ளது. யாரோ அதை கடத்திச் சென்றுள்ளனர்.
அதைக் கண்டுபிடித்து தரக் கோரி வெங்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் ஞானசேகர். இவரது புகாரையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு, சப் - இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் தனிப்படை அமைத்து கடத்திச் செல்லப்பட்ட டிராக்டரையும் அதனுடன் இணைக்கப்பட்ட டிப்பரையும் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை போலீசார் டிராக்டரைக் கடத்தியவர்களைத் தீவிரமாக தேடிவந்தனர். தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் இலந்தைகூடம் கிராமத்தைச் சேர்ந்த குரு, இவரது நண்பர் தட்டாஞ்சாவடி வீரமணி ஆகியோரை சந்தேகத்தின் பெயரில் அழைத்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர்கள் இருவரும் ஞானசேகரனின் டிராக்டரையும் அதனுடன் இணைக்கப்பட்ட டிப்பரையும் கடத்திச்சென்று சேலத்தில் அதற்குப் பெயிண்டிங் அடித்து, 10 லட்சம் மதிப்புள்ள அந்த வாகனத்தைக் கொண்டு சென்றுள்ளனர். மேலும், அதனை ரெண்டே முக்கால் லட்சத்திற்கு, களவு பொருள்தானே வந்தவரை லாபம் என்று, விற்பனை செய்வதற்கு முயற்சி செய்துள்ளனர் என்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு அவர்கள் கடத்திச் சென்ற டிராக்டரையும் டிப்பரையும் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட குரு, வீரமணி ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.