அச்சத்தின் பிடியில், வடசென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சர்மாநகர் சுற்றுவட்டார மக்கள் உள்ளனர். அச்சத்திற்கு காரணம் என்ன?
வியாசர்பாடி தொழிற்பேட்டையில் ஏராளமான சிறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த தொழிற்பேட்டைக்கு அருகே வாழும் குடியிருப்புவாசிகளுக்கு திடீர் திடீரென மூச்சுத்திணறல், குமட்டல், கண் எரிச்சல், சரும நோய், ரத்தசோகை, வயிற்றுப் பிடிப்பு, உடல் சோர்வு போன்றவைகள் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இந்த திடீர் பாதிப்பு ஏன் ஏற்படுகிறது என்று நீண்டநாட்களாக மக்களுக்குத் தெரியவில்லை. அச்சமும், பயமும் அவர்களைக் கவ்விக் கொண்டது.
வியாசர்பாடி தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது டி.எம்.ராதா கிருஷ்ணா கம்பெனி. துத்தநாகம் மூலம் இரும்புக் கம்பி மற்றும் குழாய்களுக்கு முலாம் பூசும் இந்த நிறுவனத்திலிருந்து வெளியேறும் நச்சுப்புகைதான் இத்தகைய திடீர் பாதிப்புகளுக்குக் காரணம் என்பதை மக்கள் அறிந்துகொண்டதும், அவர்களின் அச்சம் ஆவேசமாகிறது.
இந்த கம்பெனியில் ஆர்டர்கள் அதிகம் வரும்போது வேலைகளும் அதிகமாக நடக்கிறது. இதனால் நச்சுப்புகையின் அளவும் கூடுகிறது. அப்போதுதான் நச்சுப் புகையின் அளவு அதி வேகமாகப் பரவுகிறது. ஆலையின் புகைப்போக்கிகள் மிகக் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதும் புகை பரவுவதற்குக் காரணமாகிறது என்கின்றனர் பகுதி மக்கள்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு எப்படி அனுமதி அளித்தது எனத் தெரியவில்லை. இந்த ஆலையால் மிகப்பெரிய சேதாரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இப்பகுதி மக்களும், வியாபாரிகளும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், நூற்றுக்கணக்கான குடியிருப்பு வாசிகள் கையெழுத்திட்ட புகாரை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், சம்மந்தப்பட்ட துறைக்கும் அனுப்பியுள்ளனர். ஆனால், பொதுமக்களிடமிருந்து எந்தப் புகாரும் வரவில்லை என மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
இதுகுறித்து நேரடியாக விசாரித்தபோது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள எருக்கஞ்சேரியில் இந்தப் பிரச்சனை இருந்ததை உணரமுடிந்தது. அங்குள்ள சிறிய மற்றும் பெரிய கடை வியாபாரிகள், உணவுக்கடைகள், பெட்ரோல் பங் ஊழியர்கள் ஆகியோரை விசாரித்தபோது துத்தநாகம் கலந்த புகையால்தான் இந்த விளைவுகள் ஏற்படுவதாக ஒப்புதல் அளித்தனர்.
இந்தப் புகையின் வீரியம் பெரும்பாலும் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் போதுதான் தெரியும் எனவும், அந்த நேரங்களில் தங்களால் ஓரிடத்தில் நின்று பணிசெய்யமுடியாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். இந்த துத்தநாக ஆலையை மூடவேண்டும் என அப்பகுதி மக்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளித்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தொழிற்சாலையை எதிர்த்துக் குரல் கொடுத்துவரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எம்.ஏ. சேவியர், அதே பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் தனக்கு லஞ்சம் கொடுக்க முயல்வதாக ஆடியோ ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், "இந்த கம்பெனியில் பணியாற்றும் தொழிலாளர்கள் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமலும், உயிர்காக்கும் உபகரணங்கள் இல்லாமலும் தான் பணியாற்றுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்களையும், முதியவர்களையும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்த கம்பெனி அருகில் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள், மார்கெட், பஸ் ஸ்டாண்ட் என மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்கள் உள்ளன.
சர்மாநகர், புதுநகர், சாலைமாநகர், காந்திநகர், பாரதிநகர், சாஸ்திரிநகர், சிவகாமி அம்மையார் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட 2 கிலோமீட்டர் சுற்றளவில், காற்றில் கலந்த இந்த நச்சுப்புகை பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை நாங்கள் தொடர்ந்து எதிர்த்துக் குரல் கொடுத்துவருகிறோம். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டத் துணைச் செயலர் வசந்தகுமார், கடந்த 8ம் தேதி மொபைல் ஃபோனில் மிரட்டல் விடுத்ததோடு, கம்பெனி உரிமையாளர் ஓட்டலில் சந்தித்து லஞ்சம் தர அழைத்ததாகவும் தெரிவித்தார். இது மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே அச்சமூட்டும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டத் துணைச் செயலர் வசந்தகுமார், லஞ்சம் கொடுக்க, சேவியரை அழைத்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.