மாணவ மாணவிகளை கொடைக்கானல் சுற்றுலா அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைதான நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் உதவி தலைமை ஆசிரியராக வேதியியல் பாடமெடுக்கும் ஆசிரியர் ரமேஷ் பணிபுரிகிறார். இவர் சில தினங்கள் முன் 5 மாணவ மாணவிகளை தனது காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் கல்வித் துறை, காவல் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடத்திய விசாரணையின் முடிவிலும் மாவட்ட சமூகநல அலுவலர் கோகுல பிரியா கொடுத்த புகாரின் பேரிலும் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்து உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஆசிரியர் ரமேஷ் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று காலை பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த நிலையில், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ரமேஷ் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைப்பள்ளிகள்) உத்தரவிட்டுள்ளார். பணியிடை நீக்கம் குறித்த உத்தரவு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர், கருவூலம் உள்பட பலருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.