விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் இது குறித்து விளக்கமளித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது: “குற்றச் செயல்களில் ஈடுபட்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிலரின் பற்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது. அந்த ஏ.எஸ்.பி. உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சம்பவங்களில் எந்த விதமான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதை இந்த அவையில் நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். அந்த வகையில், இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திர கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளரை பணி இடைநீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். முழுமையான விசாரணை அறிக்கை வந்த பிறகு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நான் உறுதி அளிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
பல் பிடுங்கிய விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஏஎஸ்பி பல்வீர் சிங், நெல்லை எஸ்.பி சரவணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 3 ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆய்வாளர்கள் சந்திரமோகன் (அம்பாசமுத்திரம்), ராஜகுமாரி (கல்லிடைக்குறிச்சி), விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல் அம்பாசமுத்திரம் தனிப் படை எஸ்ஐ சக்தி நடராஜன், காவலர்கள் மணிகண்டன், சந்தான குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.