கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை என்பது கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் இன்றைய நிலையில் சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடந்த இரண்டே நாட்களில் தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏற்பட்ட தக்காளி விளைச்சல் பாதிப்பு, அதே நேரம் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவு போன்ற காரணங்களால் இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்யவும் தலைமை செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் உள்ள 65 பண்ணை பசுமை கடைகள் மற்றும் நடமாடும் காய்கறி கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. அரசு கொள்முதல் விலைக்கே விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி சந்தைகளில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்ததையடுத்து குறைந்த விலைக்கு விற்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.